சித்தோடு அருகே ரசாயன கழிவு நீர் கலந்து ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஓடை நீர்: துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே ரசாயன கழிவுநீர் ஓடையில் வந்தால் மீன் செத்து மிதந்தன. மேலும், துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதியடைந்தனர்.;
சித்தோடு அருகே ரசாயன கழிவுநீர் ஓடையில் வந்தால் மீன் செத்து மிதந்தன. மேலும், துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதியடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே ஆட்டையாம்பாளையம் வழியாக கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெருந்துறை சிப்காட்டில் இருந்து சில சாய ஆலைகளின் கழிவுநீர் டேங்கர் லாரியில் நிரப்பி வந்து ஆட்டையாம்பாளையத்தில் உள்ள வாய்க்காலில் கலந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால், ஆட்டையாம்பாளையம் வாய்க்கால், கொளத்துபாளையம், வெள்ளப்பாளையம், பள்ளிபாளையம், எல்லபாளையம், பெரியகுளம், சேமூர், கனிராவுத்தர் குளம் ஆகிய பகுதிகளில் உள்ள வாய்க்காலில் தண்ணீரின் நிறம் மாறி அதில் இருக்கும் மீன்களும் செத்து மிதந்தது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- ஆட்டையாம்பாளையம் வாய்க்காலில் கழிவுநீர் கலந்து வந்ததால் குளத்தில் உள்ள மீன்கள் அனைத்தும் செத்து மிதந்தன. மேலும் துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால் அருகில் குடியிருக்கும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
மேலும், இந்த தண்ணீரை விவசாயத்திற்கும், பொதுமக்கள் குடிப்பதற்கும் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கும் இந்த தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை. இந்த கழிவு நீர் கலந்த வாய்க்கால் தண்ணீரை விவசாயிகள் தோட்டத்தில் பாய்ச்சும் போது விவசாய நிலம் செந்நிறத்தில் நிறம் மாறிவிடுகிறது என தெரிவித்தனர்.
எனவே இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், மேலும் குளத்தில் உள்ள கழிவுநீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும், இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகமும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அப்பகுதியை மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.