தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை; ஈவிகேஎஸ் இளங்கோவன்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

Update: 2023-11-21 04:15 GMT

ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டரங்கில் சட்டசபை பொதுக் கணக்குக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. கூட்டம் நடக்கும்போது எங்களை போன்றவர்களை அழைப்பது வழக்கம். ஆனால் இப்போது அப்படி இல்லை. யாரையும் கூப்பிடாமல் கூட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். அது என்ன மர்மமான கூட்டமோ என்று எனக்கு தெரியவில்லை. என்ன நடந்தது என விசாரித்துவிட்டு கூட்டம் பற்றி பதில் கூறுகிறேன்.

கூட்டம் நடந்தது பத்திரிகையில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் எனக்கு மட்டுமின்றி தங்கபாலு, திருநாவுக்கரசு போன்றவருக்கும் தெரியவில்லை. மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று சொல்லவில்லை. முதலில் முன்னாள் தலைவர்கள் என்றார்கள். பின்னர் மூத்த தலைவர்கள் என்றார்கள். தற்போது முடிந்து போன தலைவர்கள் என்கிறார்கள்.

காவிரி பிரச்சினையில் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடவில்லை. நமக்கு எப்படி வயிற்று பிரச்சினை, குடிநீர் பிரச்சினை உள்ளதோ, அதேபோல்தான் கர்நாடகாவில் உள்ளவர்களுக்கும் உள்ளது. நம்மை பொறுத்தவரையில் அதை சுமூகமாக பேசி தீர்த்து கொள்ள வேண்டும். தமிழக அரசு நேரடியாக முறையிட்டு உள்ளது. ஆணையத்தையும் நாடி உள்ளனர்.

இதற்கிடையில் முறையாக தண்ணீர் கிடைக்காவிட்டால், உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய தீர்மானத்திற்கு  ஆளுநர் அனுமதி வழங்கவில்லை. அவர் இஷ்டத்துக்கு என்னவெல்லாமோ செய்கிறார். கடந்த 4 நாட்களில் அவர் மாறி மாறி பேசி வருகிறார். அவர் ஆளுநராக  இருப்பதற்கு முன்பு நல்ல மனிதராக இருக்க வேண்டும்.

செய்யாறில் சிப்காட்டுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. அதில் ஒன்றிரண்டு பேர் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தி, மக்களிடையே அமைதியைக் குலைக்கும் விதமாக நடந்து கொண்டனர். அதை அரசு தடுத்துள்ளது.

அப்போது தவறுதலாக விவசாயிகள் மீதும் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்ததும் முதல்வர் ஸ்டாலின் அதை ரத்து செய்துள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜி உடல் நிலையில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. முதலில் அவருக்குத் தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும். நடைபெற உள்ள 5 மாநில தேர்தலில் பஞ்ச பாண்டவர்களைபோல நாங்கள் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர்  கூறினார்.

Tags:    

Similar News