பெருந்துறையில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., திடீர் ஆய்வு

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., செந்தில்குமார் இன்று (ஏப்ரல் 26) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2025-04-26 12:40 GMT

பெருந்துறையில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., செந்தில்குமார் இன்று (ஏப்ரல் 26) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கணக்கம்பாளையம் மணியம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கடந்த 15ம் தேதி ஈரோடு நகர மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு 26 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக தயார் செய்யப்பட்டு வைத்திருந்த 100 லிட்டர் ஊறல் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர், பின்னர் இருவரையும் கைது செய்ய நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, இன்று மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., செந்தில்குமார், பெருந்துறை உட்கோட்டத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு,  சாராயம் காய்ச்சிய  பகுதியை நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

அப்போது, இதுபோன்ற கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மேலும், மாவட்டத்தில் முற்றிலுமாக கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தார். இந்த ஆய்வின் போது பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Similar News