ஈரோடு: ஆப்பக்கூடல் ஏரியில் 2½ ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு: நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் ஏரியில் 2½ ஏக்கர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்த நிலத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் மீட்டனர்.;
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே பவானி-அத்தாணி- சத்தியமங்கலம் மாநில நெடுஞ்சாலையையொட்டி, நீர்வளத்துறைக்கு சொந்தமான ஆப்பக்கூடல் ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 126 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், சுமார் 2½ ஏக்கர் நிலம் கடந்த 5 வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விவசாயம் நடைபெற்று வந்தது.
இதுபற்றி அறிந்த நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் நில அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீசு வழங்கினர். தொடர்ந்து, ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த தென்னை மற்றும் பாக்கு மரங்கள் என மொத்தம் 55 மரங்களை மீட்டு நீர்வளத்துறையின் கீழ் கொண்டு வந்தனர்.
இதையடுத்து, நேற்று ஆப்பக்கூடல் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் மீதமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை மீட்டெடுத்தனர். மேலும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்வது கண்டறியப்பட்டால் ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
அப்போது, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ரவி, உதவி பொறியாளர் முகமது சுலைமான், நில அளவர் முருகேசன், நில வருவாய் ஆய்வாளர் மாதேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் தர்மராஜ் மற்றும் நீர்வளத்துறை, வருவாய்த்துறை பணியாளர்கள் உள்ளிட்டோர் ஏரியை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.