ஈரோடு அவல்பூந்துறை பைரவர் கோவிலுக்கு யுனிக் புத்தக உலக சாதனை விருது

Kala Bhairava Temple in Erode-ஈரோடு அவல்பூந்துறை ராட்டை சுற்றிபாளையத்தில் உள்ள பைரவர் கோவிலுக்கு யுனிக் புத்தக உலக சாதனை விருது வழங்கப்பட்டது.

Update: 2022-12-07 08:18 GMT

Kala Bhairava Temple in Erode

அவல்பூந்துறை ராட்டை சுற்றிபாளையத்தில் பைரவர் கோவிலுக்கு யுனிக் புத்தக உலக சாதனை விருது வழங்கப்பட்டது.

Kala Bhairava Temple in Erode-ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ராட்டை சுற்றிபாளையத்தில் தென்னகத்து காசிக்கு இணையாக அனுமன் நதி இடு காடு அருகே சொர்ண ஹர்ஷன பைரவ பீடம் சார்பில் கடந்த 2014-ம்ஆண்டு காலபைரவர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கியது. இந்த கோவில் 125 அடி நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் எங்கும் இல்லாத வகையில் நுழைவு வாயிலில் கோபுரத்துக்கு பதிலாக பிரமாண்ட காலபைரவர் சிலை கட்டப்பட்டுள்ளது. இதற்காக 34 அடி உயரத்தில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டு அதற்கு மேல் 39 அடி உயரத்தில் பிரமாண்ட காலபைரவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 4 கைகளுடன் உடுக்கை, வேல், சூலம், அட்சயபாத்திரம் ஏந்தியவாறு நாயுடன் காலபைரவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

கோவிலின் நுழைவு வாயில் மற்றும் காலபைரவர் சிலை மொத்தம் 73 அடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை மட்டும் ரூ. 1 கோடியே 80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 8 ஆண்டுகளாக காலபைரவர் சிலை அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. இந்த கோவிலில் மூலவராக சொர்ண ஹர்சன பைரவர் உள்ளார். அது தவிர சிவனின் 64 வகையான பைரவ அவதாரங்களில் 62 வகையான பைரவர் சிலை கோவிலின் இருபக்கமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் வருகிற மார்ச் மாதம் நடக்கிறது. இக்கோவிலின் முகப்பு வாசலில் 39 அடி உயரம் உள்ள பைரவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை பஞ்சாப் யுனிக் சாதனை புத்தகம் சார்பில் ஆய்வு செய்து உலக சாதனை விருதுக்கு தேர்வு செய்தனர்.

இதையடுத்து உலக சாதனை விருது வழங்கும் விழா கோவிலில் நடைபெற்றது. விழாவில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு எம். பி. கணேச மூர்த்தி, யுனிக் சாதனை புத்தகம் சார்பில் தென்னக பொறுப்பாளர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு தென்னக காசி பைரவர் கோவிலுக்கான உலக சாதனை விருதை பைரவ பீடம் விஜய் சாமியிடம் வழங்கினார்கள். விழாவில் அமைச்சர் சு.முத்துசாமி பேசும் போது, இந்த கோவிலில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே பெரிய பைரவர் சிலை தமிழகத்துக்கே சிறப்பு சேர்க்கிறது. மிகப் பெரிய ஆன்மிக சுற்றுலா தலமாக இக்கோவில் விளங்கும். கும்பாபிஷேகத்துக்கு பிறகு இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள் என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு மேயர் நாகரத்தினம், மொடக்குறிச்சி எம். எல்.ஏ. சரஸ்வதி, முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி. அவல்பூந்துறை முன்னாள் பேரூராட்சி தலைவர் குணசேகரன் மற்றும் பல்வேறு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News