சித்தோடு அருகே கெமிக்கல் டேங்கர் லாரியை சுத்தம் செய்த 2 ஊழியர்கள் மூச்சு திணறி பலி
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு அருகே கெமிக்கல் டேங்கர் லாரியை சுத்தம் செய்த 2 ஊழியர்கள் மூச்சு திணறி உயிரிழந்தனர். மேலும், ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;
பவானி அடுத்த சித்தோடு அருகே கெமிக்கல் டேங்கர் லாரியை சுத்தம் செய்த 2 ஊழியர்கள் மூச்சு திணறி உயிரிழந்தனர். மேலும், ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த கோணவாய்க்கால் அருகே வாகனங்களை சுத்தம் செய்யும் மையம் செயல்பட்டு வருகிறது. இன்று (மார்ச் 30) காலை இந்த சுத்தம் செய்யும் மையத்திற்கு டேங்கர் லாரி ஒன்று வந்தது. இந்த டேங்கர் லாரியில் அலுமினியம் குளோரைடு கெமிக்கல் நிரப்பப்பட்டு கடந்த 27ம் தேதி ஹைதராபாத், ஊனாபாத் என்ற இடத்திலிருந்து திருப்பூரில் உள்ள 2 டையிங் கெமிக்கல் கம்பெனிக்கு சென்றது.
அந்த 2 டையிங் கம்பெனியிலும் அலுமினியம் குளோரைடு கெமிக்கல் இறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அந்த கெமிக்கல் டேங்கர் லாரி சுத்தம் செய்வதற்காக ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள கோணவாய்க்கால் பகுதியில் உள்ள வாகனங்களை சுத்தம் செய்யும் மையத்திற்கு வந்துள்ளது.
லாரியை திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த கிரீஸ் கந்தராஜா (வயது 48) என்பவர் ஓட்டி வந்தார். டேங்கர் லாரியை சுத்தம் செய்வதற்காக மையத்தில் வேலை செய்யும் பாலக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த சந்திரன் (62), அதே பகுதியைச் சேர்ந்த யுகானந்தன் (50), சித்தோடு பகுதியை சேர்ந்த செல்லப்பன் (52) ஆகிய 3 ஊழியர்களும் லாரிக்குள் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் அவர்கள் 3 பேரும் மூச்சு திணறி மயங்கி விழுந்தனர். இதைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே யுகானந்தன், சந்திரன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்லப்பன் பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இறந்த யுகானந்தன், சந்திரன் ஆகிய 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வாயு கசிவு ஏற்பட்டு இருவரும் இறந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.