அந்தியூர் அருகே பர்கூர் வனப்பகுதியில் வாலிபரை எரித்து கொன்ற வழக்கு: மச்சான் உள்பட 2 பேர் சிறையில் அடைப்பு!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் வனப்பகுதியில் வாலிபரை எரித்து கொன்ற வழக்கில், மச்சான் உள்பட 2 பேரை சிறையில் அடைக்கப்பட்டனர்.;
அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக வெங்கடேஷ், ராஜேந்திரன் ஆகியோரை பர்கூர் போலீசார் அழைத்து வந்த போது எடுத்த படம்.
அந்தியூர் அருகே பர்கூர் வனப்பகுதியில் வாலிபரை எரித்து கொன்ற வழக்கில், மச்சான் உள்பட 2 பேரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சின்னகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் பச்சியப்பன். இவருடைய மகன் சக்திவேல் (வயது 25). இவர் அதே ஊரை சேர்ந்த வேறு சமுதாயத்தை சேர்ந்த பாப்பம்மா (22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், கடந்த மாதம் 19ம் தேதி சக்திவேல் மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்த அவரது பெற்றோர் 26ம் தேதி பேரிகை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே, கடந்த 30ம் தேதி அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதியில் எரிந்த நிலையில் ஒரு ஆணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக பர்கூர் போலீசார் விசாரணை நடத்தியதில் எலும்புக்கூடாக கிடந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாயமான சக்திவேல் என தெரியவந்தது.
இதையடுத்து சக்திவேலை எரித்துக்கொன்றதாக பாப்பம்மாவின் அண்ணன் வெங்கடேஷ் (32), அவருடைய உறவினராக ராஜேந்திரன் (48) ஆகியோரை பர்கூர் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய குமார் என்பவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வந்தனர். பரிசோதனை முடிந்ததும் பவானியில் உள்ள 2-வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ஆஜர்படுத்தப்பட்ட 2 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.