சத்தியமங்கலத்தில் புகையிலை பொருட்களை கொண்டு வந்த இருவர் கைது
சத்தியமங்கலத்தில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த வடமாநில வாலிபர் உள்பட 2 பேர் கைது;
சத்தியமங்கலம் பெரிய பள்ளிவாசல் தெருவில் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் இருவர் வந்து கொண்டிருந்தனர். பின்னால் அமர்ந்து வந்தவர் மடியில் பெரிய மூட்டை இருந்தது. போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மூட்டைக்குள் தமிழ் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, புகையிலைப் பொருட்கள் என மொத்தம் 16 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. மொத்தம் 94 பாக்கெட்டுகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம் இருக்கும்.
போலீஸ் விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜிதேந்திர சிங் (வயது 28), மைசூரைச் சேர்ந்த கோபி என்பதும் தெரியவந்தது. இருவரும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தது தெரியவந்தது. இது அடுத்து இவர்களிடமிருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் ரொக்கப் பணம் ரூ 10 ஆயிரத்து 350 பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகேந்திர சிங், கோபியை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.சமீபகாலமாக கர்நாடகாவில் இருந்து ஈரோடு வழியாக தமிழ்நாட்டுக்கு புகையிலை பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. ஆனால் போலீசார் உஷார்படுத்தப்பட்டு சோதனை சாவடி மற்றும் நெடுஞ்சாலை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.