ஈரோடு: கொளாநல்லி பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு, விழிப்புணர்வு முகாம்
ஈரோடு மாவட்டம் கொளாநல்லி பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு, தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் இன்று (டிச.27) நடைபெற்றது.
கொளாநல்லி பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு, தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் இன்று (டிச.27) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சிவகிரி வட்டாரம் கொளாநல்லி அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பகுதிக்கு உட்பட்ட பெரிய செம்மாண்டம்பாளையம் மற்றும் கருங்காடு பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்கம் மற்றும் தொழுநோய் விழிப்புணர்வு, கண்டறிதல் முகாம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த முகாம்களில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
மேலும், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காசநோய் இல்லா ஈரோடு இயக்க நோக்கம் மற்றும் பயன்கள், தொழுநோய் பரவும் விதம், தொழுநோயின் ஆரம்ப அறிகுறிகள், ஆரம்ப நிலையில் தொழுநோய்க்கான சிகிச்சையால் தவிர்க்கப்படும் அங்கஹீனங்கள், தொழுநோய்க்கான இலவச சிகிச்சை கிடைக்கும் இடங்கள் குறித்து விளக்கமாக சுகாதார நலக் கல்வி வழங்கப்பட்டது.
இந்த முகாம்களில் ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மருத்துவ அலுவலர் மரு.மணிவண்ணன், வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் மகாலிங்கம், காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பாலகுமார், சுகாதார ஆய்வாளர் தங்கவேல், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர்கள், செவிலியர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் 125 பேர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இம்முகாம்களில் கலந்து கொண்ட அனைவருக்கும் காசநோய், தொழுநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, மார்பக ஊடுகதிர் பரிசோதனை, சளி பரிசோதனை மற்றும் தொழுநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.