அந்தியூர் அருகே வெள்ளித்திருப்பூரில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு முகாம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூரில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் இன்று (மார்ச்.14) நடைபெற்றது.;

Update: 2025-03-14 13:10 GMT

அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூரில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் இன்று (மார்ச்.14) நடைபெற்றது. 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அம்மாபேட்டை வட்டாரம் வெள்ளித்திருப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் மற்றும் தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் அதன்பாதிப்புகள், காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காசநோய் இல்லா ஈரோடு இயக்க நோக்கம் மற்றும் பயன்கள், காசநோய்க்கான சிகிச்சை காலத்தில் அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் ஊட்டச்சத்து உணவு எடுத்துக் கொள்வதின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. 


மேலும், காசநோய் ஒழிப்பில் பொதுமக்களின் பங்கு, தொழுநோயின் ஆரம்ப அறிகுறிகள், ஆரம்ப நிலை தொழுநோய் சிகிச்சையினால் தவிர்க்கப்படும் அங்க ஹீன பாதிப்புகள், தொழு நோய்க்கான இலவச சிகிச்சை கிடைக்கும் இடங்கள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.

இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார் , மருத்துவ அலுவலர் மரு. சித்தேஸ்வரன், காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் விஜயசேகர் , மருத்துவ மல்லா மேற்பார்வையாளர் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர் சீனிவாச ரகுபதி, நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர், செவிலியர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் 90 பேர்கள் கலந்து கொண்டனர்.

 மேலும், இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காசநோய், தொழு நோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, நெஞ்சக ஊடுகதிர் பட பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Similar News