ஆப்பக்கூடல் ஏரியில் கவிழ்ந்த லாரி : 5 மணி நேரத்திற்கு பிறகு லாரி மீட்பு
ஆப்பக்கூடல் அருகே செங்கல் பாரம் ஏற்றி சென்ற லாரி ஏரியில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உட்பட 3 பேர் உயிர் தப்பினார்
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரிக்கு செங்கல்பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை சுப்பிரமணி என்பவர் ஓட்டி வந்தார். அப்போது ஆப்பக்கூடல் வழியாக பவானி- சத்தி சாலையில் பண்ணாரிக்கு அதிகாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆப்பக்கூடல் ஏரி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது லாரி ஓட்டுநர் கட்டுப்பட்டை இழந்து சாலையோரம் உள்ள ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது. இது குறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவல் சம்பவ இடத்திற்கு வந்த ஆப்பக்கூடல் போலீசார் படுகாயமடைந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த செங்கல் சூளை தொழிலாளர்களான மணி மற்றும் ஜானகி ஆகிய இருவரையும் மீனவர்கள் உதவியுடன் மீட்டனர். இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்த இருவரையும் பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து ஏரியில் கவிழ்ந்த லாரியை ஆப்பக்கூடல் போலீசார் இரண்டு கிரேன் உதவியுடன் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், பவானி-சத்தி சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.