ஈரோடு கடம்பூர் மலைப்பகுதியில் பழங்குடியின மக்கள் நூதன முறையில் வழிபாடு
Tribal People -ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் மழை வேண்டி பழங்குடியின மக்கள் நூதன முறையில் வழிபாடு நடத்தினர்.;
Tribal People - ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் அரிகியம் என்ற கிராமம் உள்ளது. வனப்பகுதிக்கு அருகாமையில் உள்ள இந்த கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இவ்வூரை சுற்றியுள்ள பெரும்பாலான விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமியாகவும், மானாவாரி பயிர்கள் மட்டுமே விளையும் நிலமாகவும் உள்ளதால், இப்பகுதி மக்கள் தங்களின் நிலங்களில் ராகி, சோளம், மரவள்ளிகிழங்கு போன்ற குறுகிய காலப்பயிர்களை மட்டுமே சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது இப்பகுதியில் உள்ள பெரும்பகுதியான விளைநிலங்களில் சோளம் பயிரிட்டுள்ள நிலையில், கடந்த ஒரு மாத காலமாக இப்பகுதியில் பயிர்கள் வளர்வதற்கு தேவையான அளவு போதிய மழையில்லாத காரணத்தால் பயிர்கள் முழுவதும் காய்ந்து கருகி விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் நிலையில் உள்ளது. இவ்வாறு மழை இல்லாத காலங்களில் இப்பகுதியை சேர்ந்த பழங்குடியின ஊராளி மக்கள் நூதன முறையில் தங்களின் இஷ்ட தெய்வங்களுக்கு வேண்டுதல் வைப்பது வழக்கமாக உள்ளது.
அதன்படி, இந்த கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு வீடாக சென்று அந்த வீடுகளில் ராகி மாவு வேண்டுமென கேட்டு வாங்கி சேகரித்த பின் மொத்தமாக எடுத்து வந்து அதனை அங்குள்ள மாரியம்மன் வைத்து கோவிலில் கூழாக காய்ச்சி இஷ்ட தெய்வங்களுக்கு படையலிட்டு வழிபாடு நடத்திினர். பின்னர் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு வெள்ளை நிறத்திலான புடவையை அணிவித்து அந்த பெண் கூழ் பானையை தலையில் வைத்து சுமந்தபடி கிராமத்தை சுற்றி ஊர்வலமாக வரவேண்டும்.
அப்போது பெண்ணின் தலையில் உள்ள பானையில் கூழை அகப்பையால் எடுத்து ஊர்வலத்தில் வரும் பெண்கள் மீது ஊற்றி விளையாடுவார்கள். தற்போது அந்த பகுதியில் போதிய மழையின்றி கடும் வறட்சி நிலவுவதால், பாரம்பரிய முறைப்படி இப்பகுதி மக்கள் மழை வேண்டி வழிபாடு நடத்திய பின் நூதன முறையில் ராகி கூழினை பெண்களின் மீது ஊற்றி விளையாடினர். இவ்வாறு செய்தால் வறட்சியாக உள்ள பகுதியில் மழை பெய்து பயிர்கள் செழித்து வளரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2