ஈரோடு: ஆப்பக்கூடல் அருகே பவானி ஆற்றில் மணல் கடத்தலை தடுக்க 7 இடங்களில் அகழி
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே பவானி ஆற்றில் மணல் கடத்தலை தடுக்க 7 இடங்களில் அகழி தோண்டப்பட்டது.;
ஆப்பக்கூடல் அருகே பவானி ஆற்றில் மணல் கடத்தலை தடுக்க 7 இடங்களில் அகழி தோண்டப்பட்டது.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் மற்றும் ஒரிச்சேரி கிராமங்களின் எல்லை பகுதியில் செல்லும் பவானி ஆற்று பகுதியில் இருந்து மர்ம நபர்கள் மணலை அள்ளி செல்வது தொடர்ந்து இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரிச்சேரி பவானி ஆற்றில் கருப்பட்டி கொப்பரைகளை பயன்படுத்தி மணல் திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் காமராஜ் மணல் திருட்டுக்கு பயன்படுத்திய நான்கு கொப்பரைகளையும் பறிமுதல் செய்து பவானி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
இந்த நிலையில், இது போன்ற மணல் திருட்டை தடுக்க பவானி ஆற்றங்கரை பகுதியில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்மராஜ் (ஆப்பக்கூடல்), காமராஜ் (ஒரிச்சேரி) ஆகியோர் நேற்று ஆய்வு கொண்டனர். தொடர்ந்து, அப்பகுதியில் ஏழு இடங்களில் மணல் கடத்தும் மினி லாரிகள் ஆற்றுக்குள் நுழையாத வகையில் ஆற்றங்கரையோரங்களில் பொக்லைன் எந்திர உதவியுடன் ஆழமாக குழி தோண்டினர். பின்னர், உள்ளே மினி லாரிகள் செல்லாத வகையில் தடுப்பு வைத்தனர். இதன், மூலம் ஆற்றுக்குள் மணல் கடத்த மினி லாரிகள் செல்வது தடுக்கப்படும் என தெரிவித்தனர்.