பவானி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!

ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஒரிச்சேரியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2025-04-05 00:20 GMT

பவானி அருகே ஒரிச்சேரியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

ஈரோடு மாவட்டம் பவானி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரிச்சேரி ஊராட்சி 9வது வார்டு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக, கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

இதனால், இப்பகுதி மக்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் போதுமான குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து, ஊராட்சி செயலாளர் பூங்கோடியிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர்.

ஆனால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், இதுகுறித்து ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்தாக சொல்லப்படுகிறது. ஆனாலும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 8 மணிக்கு பவானி ஆப்பக்கூடல் மாநில நெடுஞ்சாலையில் ஒரிச்சேரி காட்டூர் பிரிவில் காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆப்பக்கூடல் போலீசார், பவானி இன்ஸ்பெக்டர் முருகையன், பவானி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ஒரிச்சேரி ஊராட்சி செயலாளர் பூங்கோடி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே செல்லும் குடிநீர் குழாயை மாற்றி நாளை (அதாவது இன்று) குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் காலை 9.30 மணிக்கு சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனால், அப்பகுதியில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே பொக்லைன் எந்திரம் மூலம் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது.

மறியலின் போது ஆம்புலன்சுக்கு வழி விட்ட பொதுமக்கள், பவானி - ஆப்பக்கூடல் மாநில நெடுஞ்சாலையில் ஒரிச்சேரி காட்டூர் பிரிவில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, நோயாளியை ஏற்றி கொண்டு சைரன் ஒலித்த படி, ஆம்புலன்ஸ் ஒன்று பவானி நோக்கி வேகமாக வந்தது. இதை பார்த்த, பொதுமக்கள் அவசர ஊர்தியான ஆம்புலன்சுக்கு மட்டும் வழி விட்டனர். பின்னர், தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

Similar News