பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழா: சத்தியமங்கலத்தில் போக்குவரத்து மாற்றம்!

ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழாவை முன்னிட்டு சத்தியமங்கலத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.;

Update: 2025-04-02 05:00 GMT

பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழாவை முன்னிட்டு சத்தியமங்கலத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா வருகிற 8ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடக்கிறது.

இந்த விழாவில் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். இதனால் கோவில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதை கருத்தில் கொண்டு போக்குவரத்தை மாற்றம் செய்து போலீசார் உத்தரவிட்டு உள்ளனர்.

அதன்படி, வருகிற 7ம் தேதி காலை 8 மணி முதல் 8ம் தேதி மாலை 4 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சத்தியமங்கலத்தில் தாளவாடி, கர்நாடக மாநிலத்தின் பகுதிகளுக்கு பண்ணாரி, திம்பம், ஆசனூர் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மேற்குறிப்பிட்ட நாளில் சத்தியமங்கலத்தில் இருந்து வடக்குப்பேட்டை, டி.ஜி.புதூர், நால்ரோடு, கடம்பூர், கேர்மாளம், அரேபாளையம், ஆசனூர் வழியாக கர்நாடகா செல்ல வேண்டும்.

இதேபோல், கர்நாடக மாநிலத்தில் இருந்து ஆசனூர், திம்பம், பண்ணாரி வழியாக கோவை, மேட்டுப்பாளையம் மற்றும் ஈரோட்டுக்கு வரும் காய்கறி வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் ஆசனூர், அரேபாளையம், கேர்மாளம், கடம்பூர், டி.ஜி.புதூர் வழியாக வரவேண்டும். மைசூருவில் இருந்து கர்காகண்டி, தட்டக்கரை, பர்கூா, தாமரைக்கரை வழியாக அந்தியூர், ஈரோட்டுக்கு செல்லலாம். மேலும் இதே வழியை ஈரோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருவுக்கு செல்லும் வாகனங்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த தகவலை போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Similar News