திம்பம் மலைப் பாதையில் லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப் பாதையில் லாரி பழுதாகி நின்றதால் தமிழகம்-கர்நாடகம் இடையே கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையானது 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இம்மலைப்பாதை கடந்த 10 ஆம் தேதி முதல் திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேர வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக காலை 6 மணிக்கு ஒரே நேரத்தில் திம்பம் மலைப் பாதை வழியாக இருபுறமும் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதால், அவ்வப்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், கர்நாடகத்தில் இருந்து கிரானைட் பாரம் ஏற்றிய லாரி திம்பம் மலைப்பாதையில் இன்று சென்று கொண்டிருந்தது. அப்போது 9 ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது திடீரென பழுது ஏற்பட்டு லாரி நகர முடியாமல் நின்றது. இதன் காரணமாக சிறிய வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது. கனரக வாகனங்கள் செல்ல முடியாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.