அந்தியூரில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சின்னதம்பிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் இன்று (டிச.24) நடந்தது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சின்னதம்பிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அந்தியூர் வட்டார அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் இன்று (டிச.24) நடந்தது.
இந்த மருத்துவ முகாமை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும் வழங்கினார். பின்னர், முகாமில், நோயாளிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்திகிருஷ்ணன் தலைமையில் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்ட மருத்துவ குழுவினரால் அனைத்து வகையான நோய்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும், இந்த முகாமில் 30 வகையான இரத்தப் பரிசோதனைகளும், குழந்தைகளுக்கான தடுப்பூசிகளும், நாய்கடி தடுப்பூசிகளும் போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
முகாமில் அந்தியூர், தவிட்டுப்பாளையம் , சின்னத்தம்பிபாளையம் வெள்ளையம்பாளையம் நகலூர் முனியப்பம்பாளையம் கரட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களை பரிசோதனை செய்து கொண்டு மருந்து மாத்திரைகள் பெற்றுக் கொண்டனர்.
இதில், திமுக பொதுக் குழு உறுப்பினர் மாதேஸ்வரன், அந்தியூர் பேரூர் திமுக செயலாளர் காளிதாஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள் சரவணன் (மைக்கேல்பாளையம்), குருசாமி (சங்கராபாளையம்), ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் நல்லசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் விவேகம் பாலுச்சாமி, நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சண்முக சுந்தரம், பேரூர் திமுக துணைச் செயலாளர் பாப்பாத்தி, மகளிர் அணி செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.