தாளவாடி அருகே வாழைத் தோட்டத்தில் பதுங்கிய புலி
தாளவாடியை அடுத்த பசப்பன் தொட்டி கிராமத்தில் வாழைத் தோட்டத்துக்குள் புலி பதுங்கயிருந்ததால் விவசாயிகள் அச்சமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி, ஜீரஹள்ளி, தலமலை வனச்சரகங்களில் இருந்து யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் அவ்வப்போது நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் ஜீரஹள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட பசப்பன்தொட்டி கிராமத்தில், சுப்பிரமணி என்பவர், தனது வாழைத்தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச நேற்று முன்தினம் சென்றார். அப்போது, வாழைத் தோட்டத்தில் புலி ஒன்று பதுங்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் கூச்சலிட்டதைத் விவசாயிகள் அங்கு ஒன்று கூடினர்.
இதையடுத்து, புலி அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. வாழைத்தோட்டத்தில் புலி இருந்தது குறித்த செல்போன் பதிவை வனத்துறைக்கு அளித்த விவசாயிகள், புலியின் நடமாட்டத்தைக் கண்டறிந்து அதை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, நேற்று காலை ஜீரஹள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட கரளவாடி பகுதிரங்கசாமி கோயில் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் புலியின் நடமாட்டம் இருந்துள்ளது. அப்பகுதியில் ஒரு காட்டுப்பன்றியை வேட்டையாடிவிட்டு, புலி தப்பிச் சென்றுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, ஜீரஹள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஜோரைக்காடு வனப்பகுதியில் புலி நடமாட்டம் உள்ளது. இந்த நிலையில் ரங்கசாமி கோவில் பகுதியில் உள்ள பள்ளத்தில் ஒரு காட்டுப்பன்றியின் உடல் ரத்த காயங்களுடன் கிடப்பதாக அப்பகுதி விவசாயிகள் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து நாங்கள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்ட போது அப்பகுதியில் புலியின் கால் தடம் பதிவாகி இருந்தது. காட்டு பன்றியை புலி வேட்டையாடியது உறுதிப்படுத்தப்பட்டது.
இப்பகுதிக்கு அருகே பசப்பன்தொட்டி பகுதி உள்ளதால் அங்குள்ள வாழைத்தோட்டத்தில் நடமாடியது இதே புலியாக இருக்கலாம். இது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். புலிகள் பெரும்பாலும் வனப்பகுதியைவிட்டு வெளியேறுவது குறைவு. இருப்பினும் ஜோரைக்காடு வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.