கோபிசெட்டிபாளையம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த மூன்று பேர் கைது
கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அருகேயுள்ள கொங்கர்பாளையம் பகுதியில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக பங்களாப்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் பேரில், வாணிப்புத்தூர்- கொங்கர்பாளையம் ரோடு குன்னாங்கரடு பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கில் சுற்றி திரிந்த மூன்று நபர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
போலீசார் விசாரணையில், முத்துக்கருப்பன் வீதியை சேர்ந்த கருப்புசாமி (வயது 26) , குன்னாங்கரடு பகுதியை சேர்ந்த சங்கர் (42) மற்றும் இழுபாறை தோட்டத்தை சேர்ந்த குமார் (வயது 40) ஆகிய மூன்று பேரும் இரண்டு நாட்டு துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.இரண்டு நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்த பங்களாப்புதூர் போலீசார் கருப்புசாமி , சங்கர் மற்றும் குமார் ஆகிய மூன்று நபர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.