தாய் மற்றும் மகனுக்கு கொலை மிரட்டல்: 3 பேர் மீது போலீசார் வழக்கு
ஆப்பக்கூடல் புன்னம் அருகே தாய் மற்றும் மகனை அடித்து கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;
பைல் படம்
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள புன்னம் வண்ணாம்பாறை பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 42).சம்பவத்தன்று, சேகரின் அண்ணன் மகன் மோகன்குமார் அதே பகுதியில் உள்ள செந்தில் என்பவரின் வீட்டின் அருகே அவருடன் வேலை செய்யும் நபருக்கு, பணம் தருவதற்காக நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அங்கு வந்த செந்தில், மோகன்குமாரிடம் எதற்காக இங்கு நிற்கிறாய்? என கூறி வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர். அந்த நேரத்தில் அங்கு வந்த சேகர், இதுபற்றி விசாரிக்க, சேகருக்கும் செந்திலுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது, செந்தில் சேகரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதனை கண்ட சேகரின் தாயார் கருப்பாள் தடுக்க வந்த போது, செந்திலின் மைத்துனர் ரவி , மனைவி ஜெயா ஆகியோர் கருப்பாளை அடித்துள்ளனர். இதில் கருப்பாள் படுகாயமடைந்த நிலையில், கீழே விழுந்தார். பின்னர், செந்தில் வீட்டில் இருந்த அரிவாளை கொண்டு வந்து, என்னிடம் வைத்துக்கொண்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் படுகாயமடைந்த சேகர் மற்றும் கருப்பாள் ஆகிய இரண்டு பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, ஆப்பக்கூடல் போலீசார் செந்தில், ஜெயா மற்றும் ரவி ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.