திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில், மர பாரம் ஏற்றி வந்த லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதையில் மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. மேலும் தமிழகம்-கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்தாகவும் திம்பம் மலைப்பாதை உள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் இருந்து மர பாரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, திம்பம் மலைப்பாதை 6-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது, நடுரோட்டில் லாரி பழுதாகி நின்றது. இதனால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.