கவுந்தப்பாடி அருகே மறியல் நடந்த இடத்துக்கு அதிமுக எம்எல்ஏ, திமுக மாவட்ட செயலாளர் ஒரே நேரத்தில் வந்ததால் பரபரப்பு
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே மறியல் நடந்த இடத்துக்கு அதிமுக எம்எல்ஏ, திமுக மாவட்ட செயலாளர் ஒரே நேரத்தில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
கவுந்தப்பாடி அருகே மறியல் நடந்த இடத்துக்கு அதிமுக எம்எல்ஏ, திமுக மாவட்ட செயலாளர் ஒரே நேரத்தில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பாப்பாங்காட்டூர் அண்ணமார் கோவில் தோட்டத்தில் நள்ளிரவு ஆட்டு பட்டியில் புகுந்த தெரு நாய்கள் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்துக் கொன்றது. இது போன்ற சம்பவங்கள் இந்த பகுதியில் அடிக்கடி நடந்து வருவதாக கூறி ஆடு வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் இறந்து கிடந்த 10 ஆடுகளுடன் கோபி - ஈரோடு பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சாலை மறியலுக்கு ஆதரவாக அய்யம்பாளையம், பனங்காட்டு, மணியம்பாளையம், வேலம்பாளையம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்போர்களும் கலந்து கொண்டார்கள். தகவல் அறிந்த கோபி டிஎஸ்பி சீனிவாசன், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாகமணி, பவானி தாசில்தார் சித்ரா ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் பவானி கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அதை தொடர்ந்து ஈரோடு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் தோப்பு வெங்கடாசலம் இது பற்றி தெரிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்தார்.
தொடர்ந்து அ.தி.மு.க. வை சேர்ந்த கருப்பணன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் இருவரும் சம்பவ இடத்தில் பொதுமக்களிடம் தனித் தனியாக பேசினார்கள். இதில் கருப்பணன் எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆடுகள் வாங்கி கொடுப்பதாக உறுதி அளித்தார்.
அதைத்தொடர்ந்து, தி.மு.க. மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணமாக தொகை கொடுப்பதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியல் நடந்த இடத்தில் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. செயலாளர் தோப்பு வெங்கடாசலம் ஒரே நேரத்தில் வந்ததால் பரபரப்பு நிலவியது.