கந்துவட்டி கேட்டு மிரட்டல்: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் வியாபாரி தர்ணா!

கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் வியாபாரி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2025-04-10 03:00 GMT

கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் வியாபாரி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள கூத்தம்பட்டி ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் பண்டாரப்பன் (வயது 36). பொம்மை வியாபாரியான இவர் நேற்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அவர் தனது குடும்பத்துடன் வந்தார்.

அப்போது, அவர் திடீரென குடும்பத்தினருடன் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, போலீசாரிடம் பண்டாரப்பன் கூறியதாவது, நானும், எனது சகோதரர்களும் சேர்ந்து ஒருவரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கி இருந்தோம். அதற்கு வட்டியுடன் சேர்த்து பணத்தை திருப்பி கொடுத்தோம்.

ஆனால், மாதந்தோறும் ரூ.65 ஆயிரம் வட்டியாக கொடுக்க வேண்டும் என்று அவர் கந்துவட்டி கேட்டு மிரட்டுகிறார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 7ம் தேதி புகார் மனு கொடுத்தேன்.

அதன்பேரில், அறச்சலூர் போலீஸ்காரர் ஒருவர் என்னையும், எனது குடும்பத்தினரையும் கந்துவட்டி கேட்டு மிரட்டுபவரிடம் விசாரணை நடத்த அழைத்து சென்றார். ஆனால், போலீஸ்காரர் முன்னிலையிலேயே அவர்கள் எங்களை சரமாரியாக தாக்கினர்.

எனவே, எங்களை தாக்கியவர்கள் மீதும், கந்துவட்டி கேட்டு மிரட்டுபவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.

Similar News