அந்தியூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பங்களை சரி செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2025-03-17 12:00 GMT

அந்தியூர் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள மின்கம்பங்களை சரி செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் அடுத்த மரவபாளையம் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதிகளில் மின் வாரியம் சார்பில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த மின் கம்பங்களில் இருந்து வீடுகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மரவபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள 5க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இதுகுறித்து, மின் வாரியத்திடம் அந்த பகுதி பொதுமக்கள் புகார் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதைத் தொடர்ந்து, மரவபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று (மார்ச் 17) காலை அந்தியூர்- வெள்ளித்திருப்பூர் சாலையில் திரண்டனர்.

தொடர்ந்து, அவர்கள் மின் கம்பங்களை சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதில், மின் வாரிய அதிகாரிகளிடம் பேசி மின் கம்பங்கள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் இந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொதுமக்கள் கலைந்து சென்றதும் போக்குவரத்து சீராகி வாகனங்கள் சென்றன. இந்த மறியலால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Similar News