ஈரோடு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆதார் கார்டுகளை தரையில் போட்டு இறப்பு சான்றிதழ் கேட்ட மக்கள்!
அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆதார் கார்டுகளை தரையில் போட்டு இறப்பு சான்றிதழ் கேட்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.;
அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆதார் கார்டுகளை தரையில் போட்டு இறப்பு சான்றிதழ் கேட்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மே.5) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் கலெக்டரை சந்தித்து தங்களது பிரச்சினைகள் குறித்து மனுக்களை வழங்கினர்.
அப்போது, ஆர்.என்.புதூர், காசிபாளையம் கிராமம் அன்னை தெரேசா நகரை சேர்ந்த மக்கள் சிலர் கையில் ஆதார் அட்டையுடன் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் திடீரென ஆதார் அட்டையை தரையில் போட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, நாங்கள் மேற்கொண்ட முகவரியில் கடந்த 18 வருடங்களாக எவ்வித அடிப்படை வசதி இன்றி வசித்து வருகிறோம். இங்கு சுமார் 60 குடும்பங்கள் குழந்தைகள் மற்றும் வயதானவர்களுடன் வசித்து வருகிறோம்.
எங்களுடைய அடிப்படை வசதிகள் குறித்து பலமுறை உயர் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரவு நேரங்களில் இங்கு வாழும் வயதானவர்கள், குழந்தைகள் பாம்பு மற்றும் பூச்சிகளுக்கும் பயந்து வாழ்ந்து வருகின்றனர்.
ஆதார் கார்டு, ரேஷன் அட்டை போட்டு உரிமம் என எதுவும் எங்களுக்கு தேவையில்லை. எங்களால் முடிந்தவரை முயற்சி செய்தும் எந்த பலனும் இல்லாத காரணத்தால் இந்த முடிவுக்கு வந்துள்ளோம். எங்களுடைய ஆதாரங்கள் அனைத்தையும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறோம்.
இங்கு வாழும் 60 குடும்பத்தினரும் இறந்துவிட்டதாக கருதி இறப்பு சான்றிதழ் அளித்து விடுங்கள், இல்லை என்றால் இங்கு வாழும் 60 குடும்பங்களுக்கும் இலவச பட்டா மற்றும் அடிப்படை வசதி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனர். இதை அடுத்து அதிகாரிகள், உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று கூறினர்.