சத்தியமங்கலம்: தாளவாடி அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே மின்சாரம் தாக்கியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே மின்சாரம் தாக்கியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள புங்கம்பாடி பாரவலசு பகுதியை சேர்ந்த இளைஞர் தீபக்குமார் (வயது 29). இவர் தனது நண்பர்களுடன் கோடை விடுமுறையை கொண்டாட தாளவாடி அடுத்த தர்மபுரம் கிராமத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு சுமார் 10 மணியளவில் துணி காய போடும் கம்பி மின்சார கம்பியுடன் இணைந்து இருந்தது. தெரியாமல் துணிகளை உலர வைப்பதற்காக கம்பியை தொட்ட தீபக் குமார் தொட்டார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் அவரை தாக்கியது.
உடனே அருகில் இருந்த சக நண்பர்கள் செருப்புடன் கூடிய காலில் மிதித்து காப்பாற்ற முயற்சி செய்து அவரை மீட்டனர். பின்னர், தாங்கள் வந்திருந்த காரில் தாளவாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கிருந்த மருத்துவர் அவரை பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் தீபக்குமாரின் தந்தை தங்கவேலுவிற்கும், தாளவாடி போலீசாருக்கும் தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து, தீபக் குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடை விடுமுறையை கொண்டாட வந்த இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.