ஈரோட்டில் நாளை (மார்ச் 15) வேலைவாய்ப்பு பயிற்சிக்கான பதிவு முகாம்

ஈரோட்டில் வேலைவாய்ப்பு பயிற்சிக்கான பதிவு முகாம் நாளை (மார்ச் 15ம் தேதி) சனிக்கிழமை நடக்கிறது.;

Update: 2025-03-14 01:10 GMT

ஈரோட்டில் வேலைவாய்ப்பு பயிற்சிக்கான பதிவு முகாம் நாளை (மார்ச் 15ம் தேதி) சனிக்கிழமை நடக்கிறது.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பயிற்சி காலம் 12 மாதங்களாகும். பயிற்சி காலத்தில் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும். ஒரு முறை மானியமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். பயிற்சி பெற விரும்புபவர்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., பட்டயப்படிப்பு, பட்டப்படிப்புகள் முடித்த 21 வயது முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் பயிற்சியில் சேர தகுதியானவர்கள். ஆன்லைன் கல்வி, தொலைதூர கல்வி திட்டங்களில் படித்துக் கொண்டு இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். முழுநேர வேலை, முழுநேர கல்வியில் இருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய நாளை (சனிக்கிழமை) ஈரோடு ரங்கம்பாளையத்தில் சிறப்பு முகாம் நடக்கிறது. ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை நடைபெறும் மெகா வேலை வாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் அமைக்கப்படும் அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை உரிய சான்றிதழ்களுடன் வந்து பதிவு செய்யலாம்.

மேலும், பிரதமரின் வேலை வாய்ப்பு பயிற்சி திட்டத்தில் பதிவு செய்து பயன் பெறவும் மற்றும்  பயிற்சி பெறுவதற்கான நிறுவனங்கள் பற்றிய விபரங்களை https://pminternship.mca.gov.in/login என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News