ஈரோட்டில் ஓடும் ரயிலில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட பிரபல ஆந்திரா திருடன் கைது!

ஈரோட்டில் ஓடும் ரயிலில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட பிரபல ஆந்திரா திருடனை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.;

Update: 2025-04-05 07:50 GMT

ஈரோட்டில் ஓடும் ரயிலில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட பிரபல ஆந்திரா திருடனை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

சென்னை அய்யம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி. இவர் தனது கணவருடன் சென்னையில் இருந்து கோவை செல்வதற்காக இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்து செய்து கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி பயணம் செய்தார். 

இந்த ரெயில் காவிரி ரயில் நிலையம் அருகில் மெதுவாக வந்து கொண்டு இருந்தது. அப்போது, ஜெயந்தி கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் ஒருவர் பறித்துக்கொண்டு ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.  இதைத் தொடர்ந்து, ஈரோடு ரயில் நிலையத்துக்கு ரெயில் வந்தபோது ஜெயந்தி இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசில் புகார் கொடுத்தார்.

இதேபோல் மதுரையை சேர்ந்த லாவண்யா (வயது 26) என்பவர் தனது குடும்பத்துடன் சங்ககிரியில் இருந்து பொம்முடி வரை செல்வதற்காக சென்னை வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுப்பெட்டியில் கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி பயணம் மேற்கொண்டார்.

இந்த ரயில் சங்ககிரி ரயில் நிலையத்தில் இருந்து மெதுவாக புறப்பட்டபோது, லாவண்யா கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை மர்ம நபர் பறித்துக்கொண்டு ரயிலில் இருந்து குதித்து தப்பி ஓடினார். பின்னர் லாவண்யா இதுகுறித்து ஈரோடு ரயில் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த 2 புகார்களின் பேரில் ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், குற்றவாளியை விரைந்து பிடிக்க ஈரோடு ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியாசாய்ஸ்ரீ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர், 2 பெண்களிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர். 

இந்த நிலையில், ஈரோடு எலக்ட்ரிக் லோகோ செட் பகுதியில் சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டு இருந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் (42) என்பதும், இவர் தான் ஜெயந்தி, லாவண்யா ஆகியோரிடம் 13 பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்றதும் தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து, போலீசார் பாலமுருகனை கைது செய்தனர். மேலும் அவர் தங்க சங்கிலியை உருக்கி வைத்திருந்த 8¼ பவுன் 2 தங்க கட்டிகளையும் போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட பாலமுருகன் மீது ஆந்திர மாநிலத்தில் 15-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர். 

2 பெண்களிடம் நகையை பறித்து சென்றவரை விரைந்து பிடித்த ஈரோடு ரெயில்வே போலீசாரை, ரயில்வே போலீஸ் துறை இயக்குனர் வன்னிய பெருமாள் பாராட்டினார்.

Similar News