ஆசிரியை வீட்டை அபகரிக்க முயன்ற ஈரோடு அரசு பள்ளி தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்!
வீட்டை அடமானம் வைத்துப் பெற்ற கடன் தொகையை திரும்பச் செலுத்தியும் ஆசிரியை வீட்டை அபகரிக்க முயன்று, வீட்டை சூறையாடி எஸ்சி, எஸ்டி வழக்கில் சிக்கிய ஈரோடு அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.;
முத்துராமசாமி.
வீட்டை அடமானம் வைத்துப் பெற்ற கடன் தொகையை திரும்பச் செலுத்தியும் ஆசிரியை வீட்டை அபகரிக்க முயன்று, வீட்டை சூறையாடி எஸ்சி, எஸ்டி வழக்கில் சிக்கிய ஈரோடு அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஈரோடு சொட்டையம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துராமசாமி (வயது 57). இவர் ஈரோடு பெரியார் வீதியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவரிடம் கோபியை அடுத்த நாகர்பாளையம் நஞ்சப்பாநகரை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி முத்துராமசாமியின் மனைவியான அரசு பள்ளி ஆசிரியை பிரபா (48) கடந்த 2015-ம் ஆண்டு தனது குடும்ப செலவுக்காக வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.15 லட்சம் கடன் வாங்கினார்.
வாங்கிய கடனை செலுத்திய பிறகும், தலைமையாசிரியர் முத்துராமசாமி வீட்டு பத்திரத்தை திரும்ப தராமல் வீட்டை அபகரிக்க முயன்றதாகவும், தனது ஆதரவாளர்களுடன் வந்து வீட்டில் உள்ள பொருட்களை சூறையாடியதாகவும் ஆசிரியை பிரபா ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின்பேரில், விசாரணை நடத்த கோபி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, கோபி போலீசார் தலைமையாசிரியரான முத்துராமசாமி உள்பட அவரது ஆதரவாளர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுப்பாராவ் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி பரமசிவம் உரிய விசாரணை நடத்தி தலைமையாசிரியர் முத்துராமசாமியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நகலை முத்துராமசாமியிடம் நேரில் சென்று கொடுக்க முயன்றபோது அவர் வாங்க மறுத்ததாகவும், இதனால் பதிவு தபால் மூலமாக அனுப்பி வைத்ததாகவும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட முத்துராமசாமி ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளராகவும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.