ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.23) தீக்குளிக்க முயன்ற மூதாட்டியை போலீசார் காப்பாற்றினர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.23) தீக்குளிக்க முயன்ற மூதாட்டியை போலீசார் காப்பாற்றினர்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.23) திங்கட்கிழமை மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மனு அளிப்பதற்காக ஈரோடு வைரபாளையத்தைச் சேர்ந்த சின்னம்மா (வயது 80) என்ற மூதாட்டி ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வந்தார்.
அப்போது, அவர் மறைத்து எடுத்து வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப் பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த ஈரோடு தெற்கு காவல் நிலைய போலீசார் மூதாட்டியிடம் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, போலீசார் அந்த மூதாட்டியிடம் விசாரணை நடத்தியதில், இவருக்கு 2 ஏக்கர் நிலம் இருந்ததாகவும், நீதிமன்ற வழக்கும் எதிர் தரப்பினருக்கு சாதகமாக வந்து விட்டது என கூறி தற்போது வாழ்வாதாரம் இல்லை என கூறி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, மூதாட்டியை மீட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.