ஈரோட்டில் ஏ.சி.மெக்கானிக் கொலை வழக்கு: ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை

ஈரோட்டில் ஏ.சி.மெக்கானிக் கொலை வழக்கில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2025-02-27 10:30 GMT

கொலை செய்யப்பட்ட ஸ்ரீதர்.

ஈரோட்டில் ஏ.சி.மெக்கானிக் கொலை வழக்கில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு அருகே உள்ள திண்டல் காரப்பாறை, புதுகாலனியை சேர்ந்தவர் ராஜீவ் மகன் ஸ்ரீதர் (வயது 28). ஏ.சி. மெக்கானிக். இவர் சவுமியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். சவுமியா ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் அலுவலராக வேலை பார்த்து வருகிறார். ஸ்ரீதர் நேற்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். சவுமியா வேலைக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில், மாலை வேலை முடிந்து சவுமியா பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டிற்குள் ஸ்ரீதர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இச்சம்பவம் குறித்த தகவலின்பேரில், ஈரோடு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசாரும், டவுன் டி.எஸ்.பி முத்துக்குமரனும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அதில், முன்விரோதம் காரணமாக ஸ்ரீதர் கொலை செய்யப்பட்டி ருப்பது தெரியவந்தது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் கொலையான ஸ்ரீதர், கடந்த 3 நாட்களுக்கு (24ம் தேதி) முன்னர் அவரது நண்பர்களான பாலமுருகன், தமிழரசன் ஆகியோருடன் மது அருந்தி உள்ளார்.

அப்போது, பாலமுருகனுக்கும், தமிழரசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு 3 பேருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதில் பாதிக்கப்பட்ட பாலமுருகன் ஈரோடு தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் தமிழரசன் தலைமறைவானார். எனவே இந்த சம்பவத்தால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ஸ்ரீதர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடக்கியுள்ளனர்.

தற்போது இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். அவர் அளிக்கும் தகவலின் பேரிலேயே ஸ்ரீதர் கொலை சம்பவம் குறித்த முழுமையாக தகவல்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Similar News