ஈரோட்டில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.19 லட்சம் மோசடி செய்தவர் கைது

ஈரோட்டில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.19 லட்சம் பணம் பெற்று ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2025-01-07 05:30 GMT

பண மோசடியில் ஈடுபட்டவர் கைது (பைல் படம்).

ஈரோட்டில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.19 லட்சம் பணம் பெற்று ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 62). இவருக்கு, ராஜபாளைடத்தைச் சேர்ந்த வர்க்கீஸ் என்கிற ராஜா (64) என்பவர் அறிமுகமானார். தையல் தொழிலாளியான ராஜா ஈரோடு சூரம்பட்டி எஸ்கேசி சாலை பகுதியில் தனியாக வசித்துக் கொண்டு  மற்றும் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுத்து வந்தார்.

இந்நிலையில், ராஜா கருப்பண்ணனிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஆசை காட்டியுள்ளார். இதை உண்மை என நம்பி கருப்பண்ணன் தன்னுடைய மகனுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணி வாங்கி தருமாறு கோரி கடந்த 2023ம் ஆண்டு ரூ.9 லட்சம் கொடுத்துள்ளார்.

ஆனால், வேலை கிடைக்கவில்லை. பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. இதனால், ஏமாற்றமடைந்த கருப்பண்ணன் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், புகாரை ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்  விசாரணை நடத்தினார்.

விசாரணையில், ராஜா இதேபோல் மேலும் 6 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.19 லட்சம் வரை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, தலைமறைவாக இருந்த ராஜாவை திருப்பூரில் போலீசார் கைது செய்தனர். பின்னர், நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News