பெருந்துறை அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்ட மிஷின் ஆபரேட்டர் வாய்க்காலில் தள்ளி கொலை: நண்பன் உள்பட 2 பேர் கைது
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்ட மிஷின் ஆபரேட்டரை வாய்க்காலில் தள்ளி கொன்ற நண்பன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்ட மிஷின் ஆபரேட்டரை வாய்க்காலில் தள்ளி கொன்ற நண்பன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பாண்டியம்பாளையம் கொளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் நல்லசாமி மகன் யுவராஜ் (வயது 39). இவர் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள மில்லில் மிஷின் ஆபரேட்டராக வேலை செய்து வந்துள்ளார்.
இவர், கடந்த மாதம் 24ம் தேதி வீட்டில் இருந்து வெள்ளாங்கோவிலில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்றவர் பிறகு வீடு திரும்பவில்லை. பின்னர், இதுகுறித்து அவரது தாயார் ராமாயாள் திங்களூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 27ம் தேதி பாண்டியம்பாளையம் கீழ்பவானி வாய்க்கால் மதகு அருகே மிதந்த ஆண் சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், சடலமாக மீட்கப்பட்டவர் யுவராஜ் எனத் தெரிந்தது.
இதனிடையே, யுவராஜின் நண்பரான கொளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (40) மற்றும் பூவேந்திரன் (வயது 43) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், யுவராஜிடம் தங்கராசு ரூ.1.90 லட்சம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார்.
தொடர்ந்து, பணத்தை திருப்பி கொடுக்குமாறு யுவராஜ், தங்கராசுவிடம் கடந்த சில வாரங்களாக கேட்டு வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தங்கராசு பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால் யுவராஜை, தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சம்பவத்தன்று இரவு, தங்கராசு மற்றும் பூவேந்திரன் சேர்ந்து, கீழ்பவானி வாய்க்காலுக்கு யுவராஜை அழைத்து சென்றனர்.
பின்னர், இருவரும் சேர்ந்து வாய்க்காலுக்குள் தள்ளிவிட்டதில் யுவராஜ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.