கோபி சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த மூதாட்டியிடம் நகை, பணம் திருட்டு
ஈரோடு மாவட்டம் கோபி சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த மூதாட்டியிடம் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த மூதாட்டியிடம் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பட்லூரைச் சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 62). இவர் தற்போது மகன் மகேந்திரனுடன் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் நிலப்பிரச்சனை தொடர்பாக மனு அளிப்பதற்காக பெருமாநல்லூரில் இருந்து கோபி சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு வெளியே வந்த அவர் தண்ணீர் குடிக்க சென்றார்.
அப்போது, அவர் 3 பவுன் நகை, ரூ.21 ஆயிரம், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்டவை அடங்கிய பையை அலுவலக வளாகத்திலேயே கீழே வைத்து விட்டு தண்ணீர் குடிக்க சென்றுள்ளார். பின்னர், வந்து பார்த்தபோது பையில் இருந்த நகை, பணம் காணாமல் போனதும், மர்ம நபர்கள், அதை திருடி சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து, அவர் இதுகுறித்து கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.