அந்தியூரில் மாரத்தான் போட்டி; வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய எம்எல்ஏ
அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு திமுக எம்எல்ஏ -வெங்கடாசலம் பரிசு வழங்கல்
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து, மூன்று பிரிவுகளில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலான மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டார்.அப்போது பேசிய அவர், போதைப் பொருளை ஒழிக்க சபதம் எடுக்க வேண்டும் எனவும், மாணவப் பருவத்திலிருந்து விளையாட்டை நேசிக்க கற்றுக் கொண்டு உடல் நலத்தை பேணி காக்க வேண்டும் எனவும் கூறினார்.
அதன்பின், மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளையும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பானுமதி, மைக்கேல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், அகில இந்திய நுகர்வோர் உரிமைகள் கழக மாநில அமைப்பு செயலாளர் வேலுச்சாமி, விளையாட்டு ஆசிரியர்கள் திருமாவளவன் சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.