ஈரோட்டில் 22வது தடகள விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் முத்துசாமி
ஈரோட்டில் தடகள விளையாட்டு சங்கம் சார்பில் நடத்தப்படும் 22வது தடகள விளையாட்டுப் போட்டியினை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.
ஈரோட்டில் தடகள விளையாட்டு சங்கம் சார்பில் நடத்தப்படும் 22வது தடகள விளையாட்டுப் போட்டியினை அமைச்சர் முத்துசாமி இன்று (3ம் தேதி) தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாநகராட்சி வ.உ.சி பூங்கா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட தடகள விளையாட்டு சங்கம் சார்பில் நடத்தப்படும் 22வது தடகள விளையாட்டுப் போட்டியினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்து தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்ட தடகள சங்கம் ஏறத்தாழ ஒரு 25 ஆண்டு காலமாக மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
தடகள சங்கத்தினர் ஒவ்வொரு நிகழ்ச்சியும் முன்னெடுத்து சிறப்பாக செய்து வருகின்றார்கள். ஏறத்தாழ 22 ஆண்டுகள் மாவட்டத்தில் போட்டியை நடத்தி இந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திருக்கிறார்கள். அதே போன்று 5 முறை மாநிலப் போட்டிகளும் நடத்தியிருக்கிறார்கள்.
ஆயிரம் பேருக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் உருவாக்கப்பட்டு அந்த போட்டியிலே அவர்கள் மிகப்பெரிய இடத்தை அடைகிற வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறார்கள். ஏறத்தாழ 100 வீரர், வீராங்கனைகளை தேசிய வீரர்களாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். 20 வீரர், வீராங்கனைகளை சர்வதேச வீரர்களாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் வித்யா ராமராஜன் அவர்கள் ஈரோடு மாவட்ட விடுதியில் தங்கி பயிற்சி பெற்றவர்கள் இன்றைக்கு பிரான்சில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் நம்முடைய ஈரோட்டிற்கும் பெருமை சேர்க்கிற அளவிற்கு சாதனையை செய்திருக்கிறார்கள்.
அதேபோல, பெங்களுரில் நடைபெற்ற போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சாம்பியனாக வந்திருக்கிறார்கள். விளையாட்டு துறையில் மிகப்பெரிய அளவிலே நம்முடைய மாணவ, மாணவியர்கள் வரவேண்டும் என்பதற்காக அதற்கான வசதிகளை மேற்கொண்டு வருகின்றார்கள் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஸ்குமார், தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்க செயலாளர் கோவிந்தராஜ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.