ஈரோடு மாவட்டத்தில் ரூ.3.47 கோடியில் 7 புதிய திட்டப் பணிகள்: திறந்து வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஈரோடு மாவட்டத்தில் ரூ.3.47 கோடி மதிப்பீட்டில் 7 புதிய திட்டப் பணிகளை தாளவாடியில் அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.;

Update: 2024-11-21 11:45 GMT

தாளவாடி, சேஷன் நகரில் நடைபெற்ற அரசு விழாவில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை அமைச்சர்கள் முத்துசாமி, சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்த போது எடுத்த படம். உடன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, அந்தியூர் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் ரூ.3.47 கோடி மதிப்பீட்டில் 7 புதிய திட்டப் பணிகளை தாளவாடியில் அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று (நவ.21) வழங்கினார்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டம், சேஷன் நகர் பகுதியில், ரூ.3.47 கோடி மதிப்பீட்டில் 7 புதிய திட்டப்பணிகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர், இந்நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி பேசியதாவது, அந்தியூர், சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய வருவாய் வட்டங்களில் ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு மலைவாழ்படி மற்றும் குளிர்காலப்படி அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தாளவாடி பகுதியில் வீட்டுவசதி வாரியம் சார்பில் ஏறத்தாழ 300 வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.


தொடர்ந்து, அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது, ஈரோடு மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் தாளவாடி வட்டம் சேஷன்நகர் பகுதியில் ரூ.47.56 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம், தாளவாடி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கட்டப்பட்ட ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம், ரூ.54.83 லட்சம் மதிப்பீட்டில் உக்கரம் ஆரம்ப சுகாதார நிலைய பொது சுகாதார அலகு கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் புன்செய்புளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் குடியிருப்பு கட்டடம். ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நம்பியூர் வட்டார பொது சுகாதார அலகு கட்டடம். ரூ.53.74 லட்சம் மதிப்பீட்டில் திங்களூர் வட்டார பொது சுகாதார அலகு கட்டடம், ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பவானி மண் தொழிலாளர் துணை சுகாதார நிலைய கட்டிடம் என மொத்தம் ரூ.3.47 கோடி மதிப்பீட்டில் 7 புதிய திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடம், போதை மீட்பு மையம், அந்தியூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம், கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த ஆய்வகக் கட்டிடம் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் என மொத்தம் ரூ.61.32 கோடி செலவில் 34 மருத்துவ கட்டிடங்கள் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் 375 துணை சுகாதார நிலையங்கள், 76 ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருந்தகம், 1 மாவட்ட தலைமை மருத்துவமனை, 2 வட்டம் சாரா மருத்துவமனை, 5 வட்டார மருத்துவமனை, 1 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சி பகுதியில் 4 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது.

மானியக் கோரிக்கை அறிவிப்புகள் 2024-25-ல் ரூ.19.80 கோடி மதிப்பீட்டில் 16 அறிவிப்புகளின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிற்கு பல்வேறு மருத்துவ கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.


மேலும், ரூ.8.5 கோடி மதிப்பில் ஈரோடு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், எம்.ஆர்.ஐ.ஸ்கேன் கருவி, ரூ.87 லட்சம் மதிப்பில் மகப்பேறு சிறப்பு மையம் மற்றும் மொடக்குறிச்சி சமுதாய சுகாதார நிலையத்தில் மல்டிபாராமானிட்டர் மற்றும் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை, மொடக்குறிச்சி சமுதாய சுகாதார நிலையத்தில் இதர கருவிகள் வழங்கப்படும்.

மேலும், ஜம்பை, பு.புளியம்பட்டி, தாளவாடியில் வட்டார பொது சுகாதார அலகு கட்டிடம், பி.மேட்டுப்பாளையம், அஞ்சூர், எருட்டிபாளையம், குந்திரி பகுதியில் துணை சுகாதார நிலையங்கள், கடம்பூர், டி.ஜி.புதூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டப்படவுள்ளது. கருப்பைவாய், மார்பக மற்றும் வாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க சமுதாயம் சார்ந்த புற்றுநோய் பரிசோதனைத் திட்டம் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்படும்.

மக்களைத் தேடி ஆய்வகம் திட்டத்தின் கீழ், இரண்டாம் நிலை மருத்துவமனைகளில் செமி ஆட்டோ அனலைசர், செல் கவுன்டர் மற்றும் இதர ஆய்வகக் கருவிகள் வாங்குதல், அனைத்து அரசு மருத்துவ நிலையங்களிலும் தகவல் மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த கணினிகள், அச்சுப்பொறிகள் மற்றும் ஸ்கேனர்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வாங்குதல் ஆகியவை மேற்கொள்ளப்படும்.


ஈரோடு, திருப்பத்தூர், கன்னியாகுமரி மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ரூ.3.31 கோடி மதிப்பீட்டில் சமூக அளவிலான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள்" முகாமானது ஈரோடு மாவட்டத்தில் 22.11.2023 அன்று காளிங்கராயன்பாளையம், துணை சுகாதார நிலையத்தில் தொடங்கி வைக்கப்பட்டதில் 10,24,998 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, 123 நபர்கள் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் முதல் சேவை 18,22,062 நபர்களுக்கும், தொடர் சேவை 7,35,743 நபர்களுக்கும் 100 சதவீதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 6 அரசு மருத்துவமனை. 10 தனியார் மருத்துவமனைகளில் 6750 நபர்களுக்கு ரூ.7,34,75,701 மதிப்பில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 171 முகாம்கள் நடத்தப்பட்டு 157455 பயன்பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் இருதய நோயினால் ஏற்படும் உயிரிழப்பினை தடுக்கும் பொருட்டு இதயம் காப்போம் தொடங்கி வைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இதில் இருதய பாதுகாப்பு மருந்துகளான ஆஸ்பிரின், க்ளோபிடோக்ரல், ஆட்ரோவாஸ்டாட்டின் மாத்திரைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 536, துணை சுகாதார நிலையங்களில் 22 என 558 வாங்கி பயன்பெற்றுள்ளனர்.

சிறுநீரக செயலிழப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பொருட்டு சிறுநீரகம் பாதுகாப்பு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 386 நபர்களும், துணை சுகாதார நிலையங்களில் 36 நபர்களும் என 422 நபர்கள் பயனடைந்துள்ளனர்.


பழங்குடியினருக்கு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய இந்தியாவின் முதல் மாவட்டம் தமிழ்நாட்டின் நீலகிரி ஆகும். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் யாரும் எளிதில் செல்ல முடியாத போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும் அவர்களின் வீடுகளை தேடிச் சென்று மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் தாளவாடி மக்கள் பிரேத பரிசோதனைக்கு சத்தியமங்கலம் செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும், இப்பகுதிக்கு என பிரேத பரிசோதனை கூடம் அமைத்துத்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, இப்பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று ரூ.78 லட்சம் மதிப்பில் பிரேத பரிசோதனை கூடம் கட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, 10 பயனாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகத்தினையும். 5 கர்ப்பிணி தாய்மார்களுக்கு உட்டச்சத்து பெட்டகத்தினையும், காசநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 2 நபர்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பினையும் அமைச்சர்கள் முத்துசாமி, சுப்பிரமணியன் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரெ.சதீஸ், கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம், இணை இயக்குநர் (நலப்பணிகள்) அம்பிகா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) அருணா உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள், மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News