ஈரோடு ஆசனூர் பகுதி மக்களை மிரட்டும் ஒற்றை காட்டு யானை.. விரட்ட 2 கும்கி யானைகள் வரவழைப்பு…

ஈரோடு மாவட்டம், ஆசனூர் பகுதியில் விவசாயிகளை மிரட்டும் வகையில் சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானையை விரட்டும் வகையில் இரண்டு கும்கி யானைகளை வனத்துறையினர் வரவழைத்துள்ளனர்.

Update: 2022-12-16 08:32 GMT

கும்கி யானைகளுடன் வனத்துறையினர்.

தமிழக-கர்நாடக எல்லை காட்டுப் பகுதியான சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், மொத்தம்10 வனச்சரகங்கள் உள்ளன. அந்த வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி விவசாயத் தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.

இந்த நிலையில், ஜீர்கள்ளி வனச்சரகத்திக்கு உட்பட்ட தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள அருள்வாடி கிராமத்தில் யானைக் கூட்டங்கள் நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது. கர்நாடக வனப்பகுதியில் இருந்து கூட்டமாக வெளியேறிய யானைகள் தமிழக வனப் பகுதியை ஒட்டி உள்ள அருள்வாடி கிராமம் அருகே உள்ள மானாவாரி நிலத்தில் சுற்றி திரிந்துள்ளது.

இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும் பொதுமக்களும் அச்சமடைந்தனர். இது பற்றிய ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர் . மேலும், கர்நாடக வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற இரு மாநில வனத்துறையினரும் சேர்ந்து யானை கூட்டத்தை 2 மணி நேர போராட்டத்திக்கு பிறகு வனப்பகுதியில் விட்டி அடித்தனர்.

2 கும்கி யானைகள் வருகை:

இதற்கிடையே, தாளவாடி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்களை பாதுகாக்க இரவு நேர காவலுக்கு செல்லும் விவசாயிகளை அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானை தாக்குவதாகவும், அந்த ஒற்றை யானை ஆசனூர் தேசிய நெடுஞ்சாலையிலும் முகாமிட்டு வாகன ஓட்டிகளை துரத்துவதாகவும் தகவல் பரவியது.

இதனால், அச்சமடைந்த விவசாயிகள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அட்டகாசம் செய்யும் ஒற்றை யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினரிடம் முறையிட்டனர். இதயெடுத்து, பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து சின்னதம்பி மற்றும் ராமு என்ற இரண்டு கும்கியானைகள் ஆசனூர் கிராமத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

அந்த யானைகள் மற்றும் யானை பாகன்கள் ஆசனூரில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். விசவாசயிகளை தாக்கும் ஒற்றை யானையை காட்டுக்குள் துரத்துவதற்கு கும்கி யானைகள் தயாராக உள்ளன என்றும் தேவைப்படும் போது கும்கி யானைகளை கொண்டு காட்டு ஒற்றை யானையை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், இரண்ட கும்கி யானைகளும் ஒரு மாதத்திற்கு ஆசனூர் கிராமத்தில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்த வனத்துறையினர், ஒற்றை யானை அச்சத்தை போக்க ஆசனூரில் கும்கி யானைகளுடன் உலா வந்தனர். மேலும், ஒற்றை யானை கிராமத்தில் புகும் வழித்தடத்தில் கும்கி யானைகளை வனத்துறையினர் அழைத்து சென்றனர்.

Tags:    

Similar News