கோபி அருகே எறும்புத் திண்ணியின் ஓடுகளை கடத்தியவர் கைது
ஈரோடு மாவட்டம் கோபி அருகே எறும்புத் திண்ணியின் ஓடுகளை வைத்திருந்தவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கோபி அருகே எறும்புத் திண்ணியின் ஓடுகளை வைத்திருந்தவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வாணிப்புத்தூர் பகுதியில் டி.என்.பாளையம் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப் போது அந்த பகுதியில் கையில் பையுடன் சந்தேகப்படும் வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். உடனே அவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவரிடம் இருந்த பையை வாங்கி வனத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் எறும்புத் திண்ணியின் ஓடுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த நபரை பங்களாப்புதூரில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப் பகுதியின் உச்சியில் உள்ள மல்லியம்மன் துர்க்கம் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்கிற ரத்தினசாமி (வயது 45) என்பது தெரியவந்தது. மேலும் கடம்பூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் எறும்புத் திண்ணி இறந்து கிடந்ததை கண்ட அவர் யாருக்கும் தெரியாமல் அதன் ஓடுகளை எடுத்து வைத்து கொண்டார்.
அழகிய மற்றும் பளபளப்பான தோற்றத்துடன் காணப்படும் எறும் புத்திண்ணி ஓடுகளை மாந்திரீகம் தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் மருத்துவ பயன்பாட்டுக்கு தேவைப்படுபவர்கள் ஆகியோரிடம் சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்க வைத்திருந்தார். இந்த நிலையில் அவர் எறும்புத்திண்ணியின் ஓடுகளை மல்லியம்மன் துர்க்கம் மலை உச்சியில் இருந்து வழக்கமான சாலை வழியாக கடத்தி சென்றால் கே.என்.பாளையத்தில் உள்ள வனத் துறை சோதனைச்சாவடியில் சிக்கி விடுவோம் என கருதினார்.
இதனால் அவர் வனப்பகுதியில் உள்ள குறுக்கு வழியாக வாணிப்புத்தூர் பகுதிக்கு எறும்புத் திண்ணி ஓடுகளை கடத்தி வந்த போது, வனத்துறையினரிடம் சிக்கி உள்ளார். இதைத்தொடர்ந்து ரத்தினசாமியை வனத்துறையினர் கைது செய்ததுடன். அவரிடம் இருந்த எறும்புத்திண்ணி ஓடுகளையும் பறிமுதல் செய்தனர்.