சிறுமியை மிரட்டி காதலிக்க வற்புறுத்திய டிரைவருக்கு 1 ஆண்டு சிறை: ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
சிறுமியை மிரட்டி காதலிக்க வற்புறுத்திய டிரைவருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.;
பைல் படம்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சென்னியப்பன். இவருடைய மகன் நந்தகுமார் (வயது 23). பால் வண்டி டிரைவர். இவர் பால் எடுக்க செல்லும்போது, 15 வயது சிறுமியை போட்டோ எடுத்தல், சிறுமி எங்கு சென்றாலும் பின் தொடர்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி நந்தகுமார் சிறுமியின் மீது மோதுவது போல் மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்துள்ளார். பின்னர் அவர், சிறுமியிடம் தன்னை காதலிக்க வேண்டும் என்றும், எங்கு கூப்பிட்டாலும் வர வேண்டும், இல்லை என்றால் போட்டோவை மார்பிங் செய்து நண்பர்களுக்கு அனுப்பி விடுவேன் என்றும் கூறி உள்ளார்.
மேலும் அவர், இதுகுறித்து பெற்றோரிடம் கூறினால் அவர்களை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன சிறுமி நடந்த விவரங்கள் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து கோபி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நந்தகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுவர்ணகுமார் நேற்று தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், செல்போனில் படம் பிடித்து காதலிக்க கோரி சிறுமியை தொந்தரவு செய்த நந்தகுமாருக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.