16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: ஈரோடு வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
ஈரோட்டில் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் பாலத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.;
வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை (பைல் படம்).
ஈரோடு மரப்பாலம் ஜீவானந்தம் வீதியை சேர்ந்த ஷேக் அலாவுதீன் மகன் ஷேக் சதாம் உசேன் (வயது 24). கூலித்தொழிலாளியான இவர், ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பழகி வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்ற பிறகு, ஷேக் சதாம் உசேன், சிறுமியின் வீட்டுக்குள் அடிக்கடி அத்துமீறி நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் தேதி ஷேக் சதாம் உசேன், சிறுமியுடன் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். அப்போது சிறுமியின் தாய் வீட்டிற்கு வர, உடனடியாக ஷேக் சதாம் உசேன், அவரை தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதைத்தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி, ஷேக் சதாம் உசேன் தனது இருசக்கர வாகனத்தில் சிறுமியை கடத்தி சென்று, அவருக்கு தெரிந்தவர் வீட்டில் வைத்து 2 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமியை காணாமல் அவருடைய பெற்றோர் பல்வேறு இடங்களிலும் தேடிப்பார்த்தனர். இதனிடையே சிறுமியை ஈரோடு கள்ளுக்கடை மேடு பகுதியில் இறக்கி விட்டுவிட்டு ஷேக் சதாம் உசேன் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், கடத்தல் மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஷேக் சதாம் உசேனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும், இதுதொடர்பாக ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கை நீதிபதி சொர்ணகுமார் விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில், சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்துக்காக 6 மாதம் சிறை தண்டனையும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்ததுடன், இந்த தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு அளித்தார்.
மேலும், அபராத தொகை ரூ.6 ஆயிரம் செலுத்த தவறினால் கூடுதலாக 4 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் தீர்ப்பில் கூறி இருந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.