கொடுமுடி பேரூராட்சி தலைவர் மீது நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு: திமுகவை சேர்ந்த பேரூராட்சி தலைவர் தோல்வி
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சி தலைவருக்கு எதிராக நடத்தப்பட்ட நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பில் திமுகவை சேர்ந்த பேரூராட்சி தலைவர் தோல்வியடைந்தார்.;
கொடுமுடி பேரூராட்சி தலைவருக்கு எதிராக நடத்தப்பட்ட நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பில் திமுகவை சேர்ந்த பேரூராட்சி தலைவர் தோல்வியடைந்தார்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில், மொத்தம் 8 திமுக, 3 காங்கிரஸ், 3 சுயேட்சை, ஒரு அதிமுக என 15 கவுன்சிலர்கள் உள்ளனர். இந்நிலையில், பேரூராட்சி தலைவர் திலகவதிக்கும், கவுன்சிலருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
மேலும், பேரூராட்சி பணிகளில் தலைவரின் கணவர் சுப்பிரமணி தலையிடுவதாக கூறி 8 திமுக கவுன்சிலர்கள், 3 காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் ஒரு கவுன்சிலர் என 12 கவுன்சிலர்கள் பேரூராட்சி தலைவரின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து 2 முறை சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். இதையடுத்து நீதிமன்றம் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த உத்தரவு அளித்தது. இறுதியாக இன்று (மார்ச் 21) நம்பிக்கை இல்லாத தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என செயல் அலுவலர் ரமேஷ்குமார் கவுன்சிலர்களுக்கு கடிதம் கொடுத்திருந்தார்.
அதன்படி, இன்று காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இதில், பேரூராட்சி தலைவர் திலகவதி சுப்பிரமணியம், 10வது வார்டு சுயேட்சை கவுன்சிலர் சரவணசாமி, 1வது வார்டு திமுக கவுன்சிலர் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
இன்று நடந்த வாக்கெடுப்பில் 11வது வார்டு அதிமுக கவுன்சிலர் திரிபுர சுந்தரி உட்பட 12 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். வாக்கெடுப்பில் 12 கவுன்சிலர்கள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்குகளை செலுத்தினர். இதனால், திமுகவை சேர்ந்த பேரூராட்சி தலைவர் திலகவதி தோல்வி அடைந்தார்.