ஈரோடு மக்கள் குறைதீர் கூட்டத்தில் 33 பயனாளிகளுக்கு ரூ.36.71 லட்சத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்!

ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, 33 பயனாளிகளுக்கு ரூ.36.71 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (ஏப்ரல் 7ம் தேதி) வழங்கினார்.;

Update: 2025-04-07 11:50 GMT

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, குறைகள் கேட்டறிந்த போது எடுத்த படம்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, 33 பயனாளிகளுக்கு ரூ.36.71 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (ஏப்ரல் 7ம் தேதி) வழங்கினார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (ஏப்ரல் 7ம் தேதி) தலைமையில் நடைபெற்றது.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாறுதல்,இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, சாலை வசதி, வேலைவாய்ப்பு மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 290 மனுக்கள் வரப்பெற்றன.


பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்.

மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


தொடர்ந்து, கூட்டத்தில் போதையில்லா தமிழ்நாடு என பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு குழுவினை ஏற்படுத்தி மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட வெள்ளித்திருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் மற்றும் பரிசுத் தொகை ரூ.15 ஆயிரம், தூக்கநாயக்கன்பாளையம் ஜே.கே.கே.முனிராஜா காலேஜ் ஆப் டெக்னாலஜி 2-ம் இடம் மற்றும் பரிசுத் தொகை ரூ.10 ஆயிரம், நாட்டு நலப்பணிகள் திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 3-ம் இடம் மற்றும் பரிசுத் தொகை ரூ.5 ஆயிரத்தினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, கூட்டுறவுத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகள் கடன் மற்றும் டாம்கோ கடனுதவிகளையும், தொழிலாளர் துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமானப் பணியிடத்து விபத்து மரண நிதியுதவி மற்றும் கல்வி உதவித் தொகையினையும் வழங்கினார்.


இதைத் தொடர்ந்து, தாட்கோ சார்பில் 10 தற்காலிக தூய்மை பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்களின் மகன், மகள் பட்டப்படிப்பு பயிலுவதற்கான ரூ.16 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் கல்வி உதவி மற்றும் முதியோர் ஓய்வூதியத் தொகையினையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகைகளையும் என மொத்தம் ரூ.36 லட்சத்து 41 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.கந்தராஜா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், உதவி இயக்குநர் (தொழிலாளர் துறை) முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், பொது மேலாளர் (தாட்கோ) அர்ஜூன், உதவி ஆணையர் (கலால்) தியாகராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் நூர்ஜஹான், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, துணை ஆட்சியர் (பயிற்சி) கே.சிவபிரகாசம், தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய மாநில உறுப்பினர் ஆர்.பி.மோகன் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News