ஈரோட்டில் விசைத்தறி கூடங்களில் ஆய்வு மேற்கொண்டு, நெசவாளர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்த முதல்வர்
ஈரோட்டில் செயல்பட்டு வரும் விசைத்தறி கூடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு, நெசவாளர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
ஈரோட்டில் செயல்பட்டு வரும் விசைத்தறி கூடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு, நெசவாளர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
தமிழ்நாட்டில் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ள விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட விசைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மற்றும் மானியத்துடன் கூடிய மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ், 750 அலகுகள் வரை வழங்கப்பட்டு வந்த விலையில்லா மின்சாரம் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி முதல் 1,000 அலகுகளாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
மின்னணு விசைப் பலகைகள் உற்பத்தியின் போது நூல்கள் அறுந்து விழுவதை தடுக்கவும், சாதாரண விசைத்தறிகளில் சீராகவும் மற்றும் நிலையான தரத்துடனும் துணிகள் உற்பத்தி செய்யப்படுவதை உறுதிப்படுத்தவும் 50 விழுக்காடு அரசு மானியத்துடன் 5,000 விசைத்தறியில் மின்னணு விசைப் பலகைகள் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டு, 6 கோடி ரூபாய் அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு, விசைத்தறி செறிவு மிக்க பகுதிகளில் 5,000 விசைத்தறிகளில் மின்னணு விசைப் பலகைகள் பொருத்தப்பட்டது போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
விசைத்தறி தொழில் மேம்பாட்டிற்காகவும், இப்பணியில் ஈடுபட்டு வரும் நெசாவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும், விசைத்தறி கூடத்திற்கு நேரில் சென்று அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்திடும் விதமாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (டிச.19) ஈரோடு மாவட்டம், பிச்சாண்டம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் இயங்கி வரும் இரண்டு விசைத்தறி கூடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்தும், நெசவாளர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த விசைத்தறி கூடங்களில் 24 விசைத்தறிகள் மூலம் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதுடன். 5 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிகழ்வின் போது, மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.