கோபிசெட்டிபாளையம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரிய கொடிவேரியில், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
சேலம் மாவட்டம், மேட்டூர் டேம் அருகேயுள்ள நாட்டாமங்கலம் நவப்பட்டி பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் சந்தியா (23), பி.எஸ்.சி பட்டதாரி. கடந்த 2019-ஆம் ஆண்டு சந்தியாவுக்கும் ஈரோடு மாவட்டம் பெரியகொடிவேரி பகுதியை சேர்ந்த, நடத்துனர் சக்திதாசன் (36) என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. சந்தியா வீட்டில் இருந்து கொண்டு பி.எட் படித்து வருகிறார். திருமணமாகி குழந்தை இல்லாத ஏக்கம் சந்தியாவுக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வெளியில் சென்று வீடு திரும்பிய சக்திதாசன், வீட்டில் சந்தியா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உறவினர்கள் உதவியுடன், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போது பரிசோதித்த மருத்துவர்கள் சந்தியா இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இது குறித்து, பங்களாப்புதூர் போலீசார் விசாரணை செய்கின்றனர். சந்தியாவுக்கு திருமணம் ஆகி 7 வருடங்களுக்குள் இருப்பதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று போலீசார் தெரிவித்தனர், இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.