10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கிய ஆசிரியர் கைது
அந்தியூரில் டியூசனுக்கு வந்த 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கிய ஆசிரியர் போக்சோவில் கைது.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேர்வீதி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 32). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர் அந்தியூர்-பவானி சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர் மாலை நேரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து டியூசன் நடத்தி வருகிறார். இவரிடம் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இதேபோல், அதேபகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவரும் டியூசனுக்கு வந்து சென்றார்.
இந்நிலையில், மாணவி கடந்த சில நாட்களாக வீட்டில் தொடர்ச்சியாக வாந்தி எடுத்து வந்தார். இதை பார்த்த அவரது தாய் அல்சராக இருக்கலாம் என நினைத்து, மகளை எண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பரிசோதனைக்கு அழைத்து சென்றார். அப்போது மாணவி 3 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்று மாணவியிடம் விசாரித்தார்.
அப்போது, மாணவி டியூசன் ஆசிரியர் லோகநாதன் ஆசை வார்த்தை கூறி தன்னை பலமுறை கற்பழித்ததாகவும், அதனால் தான் கர்ப்பம் ஆனதாகவும் தெரிவித்தார். இதையடுத்து மாணவியின் தாய் பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவம் உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து ஆசிரியர் லோகநாதனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.