ஈரோடு: இச்சிப்பாளையத்தில் காசநோய் இல்லா ஈரோடு, தொழுநோய் விழிப்புணர்வு முகாம்

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள இச்சிப்பாளையத்தில் காசநோய் இல்லா ஈரோடு இயக்கம், தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் இன்று (டிச.26) நடைபெற்றது.

Update: 2024-12-26 12:15 GMT

இச்சிப்பாளையம் வளத்தான்கோட்டை பகுதியில் நடைபெற்ற காசநோய் இல்லா ஈரோடு, தொழுநோய் விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள இச்சிப்பாளையத்தில் காசநோய் இல்லா ஈரோடு இயக்கம், தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் இன்று (டிச.26) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சிவகிரி வட்டாரம் தாமரைப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட இச்சிப்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த வளந்தான்கோட்டை பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்கம் மற்றும் தொழுநோய் விழிப்புணர்வு, கண்டறிதல் முகாம் நடைபெற்றது.


ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் வழிகாட்டுதலின்படி, நடைபெற்ற இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து, நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காசநோய் இல்லா ஈரோடு இயக்கத்தின் நோக்கம் மற்றும் பயன்கள், சளி பரிசோதனை வழங்க மேற்கொள்ள வேண்டிய முறைகள், தொழுநோய் பரவும் விதம், தொழு நோயின் ஆரம்ப அறிகுறிகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தொழுநோய்க்கான இலவச சிகிச்சை கிடைக்கும் இடங்கள், தொழு நோயைஆரம்ப நிலையில் கண்டுபிடிப்பதால் தவிர்க்கப்படும் அங்கஹீனங்கள், ஆண்களுக்கான நவீன வாசக்டமி குடும்ப நல அறுவை சிகிச்சை மேற்கொள்வதால் ஏற்படும் பயன்கள் குறித்து விளக்கமாக சுகாதார நலக் கல்வி வழங்கப்பட்டது.


இந்த முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மருத்துவ அலுவலர் மரு.ரூபிணி, வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் மகாலிங்கம், திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதன்சர்மா, காச நோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பாலகுமார், சுகாதார ஆய்வாளர்கள் நாகரத்தினம், பிரபாகரன், செவிலியர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் 120 பேர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், அனைவராலும் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டு காச நோய், தொழுநோய், குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மார்பக ஊடுகதிர் பரிசோதனை, சளி பரிசோதனை மற்றும் தொழுநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News