கவுந்தப்பாடி அருகே தேர்தலை புறக்கணிப்பதாக இன்று அடையாள உண்ணாவிரத போராட்டம்
கவுந்தப்பாடி அருகே பொது நிலத்தை மீட்டு தரக்கோரி, தேர்தலை புறக்கணிப்பதாக இன்று அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 9-வது வார்டான கிருஷ்ணாபுரம் காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சுமார் 250 வாக்காளர்கள் உள்னர். இந்த நிலையில் அம்பேத்கர் வாசக சாலை அமைக்க 8 சென்ட் நிலத்தை தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக ஒதுக்கி இருந்தது. ஆனால் அந்த இடம் தனக்கு சொந்தமான இடம் என தனியார் சிலர் கூறிக்கொண்டு அதற்கான ஆவணங்கள் தயாரித்து அந்த இடத்தை ஆக்கிர மித்துள்ளனர்.
மேலும் அந்த இடத்தை வேறு ஒருவருக்கும் விற்பனை செய்யவும் முயன்று வருகின்றனர். எனவே இடத்தை மீட்டுத்தரக்கோரி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்து, அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி கட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி, இன்று 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அம்பேத்கர் வாசக சாலை என்ற பொது நிலத்தின் அருகில் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, தகவலறிந்து வந்த பவானி வட்டாட்சியர் முத்து கிருஷ்ணன் மற்றும் கவுந்தப்பாடி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.