தர்மம் மீண்டும் வென்றது: கே.பி.முனுசாமி பேட்டி

உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளது. இதன் மூலம் தர்மம் மீண்டும் வென்றது என்று, அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கூறினார்.

Update: 2023-02-23 09:30 GMT

ஈரோடு அதிமுக கிழக்குத் தொகுதி தேர்தல் பணிமனையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக துணை பொதுச்செயலாளருமான கே.பி. முனுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது எடுத்த படம்.

உச்ச நீதிமன்றம் இன்று காலை ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பினை வரவேற்று அதிமுகவினர் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இதையொட்டி, ஈரோடு அதிமுக கிழக்குத் தொகுதி தேர்தல் பணிமனையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக துணை பொதுச்செயலாளருமான கே.பி. முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது, உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கி உள்ளது. எம்ஜிஆரால் துவக்கப்பட்டு ஜெயலலிதாவால் வலுவாக்கப்பட்ட அதிமுகவை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்று பலர் முயன்றனர். ஆனால் உச்சநீதிமன்றம் ஜூலை 11 அன்று நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. சிலர் தர்மயுத்தம் நடத்துகிறேன் என்கிறார்கள், ஆனால் உண்மையில் இத்தீர்ப்பின் மூலம் தர்மம் மீண்டும் வென்றுள்ளது.

இந்த வெற்றிக்கு அயராது பாடுபட்ட கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி யார் மற்றும் சட்டத்துறை செயலாளர் சி.வி.சண்முகம் அவர்களை சார்ந்த வழக்கறிஞர்கள் அனைவருக்கும் இந்த வெற்றியை ஈட்டி தந்ததற்கு கோடான கோடி தொண்டர்கள் சார்பில் தாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். எம்ஜிஆர் ஏழை மக்களின் வாழ்வு வளம் பெற இந்த கட்சியை துவக்கினார் அவரது வழியில் ஜெயலலிதா மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தினார். அவரது அடிச்சுவட்டில் எடப்பாடியார் கழகத்தை காத்து மக்களின் நலனுக்காக பாடுபடுவார்.

உச்சநீதிமன்றமே ஜூலை 11 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் எனக் கூறியுள்ளது. அதில் கட்சிக்கு துரோகம் இழைத்த ஓ. பன்னீர்செல்வம் உட்பட பலர் நீக்கியதும் செல்லும் என்று உள்ளது. எனவே உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்ட பிறகு அவரை கட்சியில் சேர்ப்பதற்கு இடமில்லை.‌ இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வந்துள்ள சமயத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தென்னரசு ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்வார். திமுக தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று கூறினார்கள். ஆனால் இன்று நிலைமை மாறி உள்ளது. தென்னரசு மகத்தான வெற்றி பெறுவார். எடப்பாடி நிரந்தர பொதுச் செயலாளர் ஆவது குறித்து கட்சி தலைமை கூடி முடிவு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.வி. ராமலிங்கம், கே.சி.கருப்பண்ணன், கோகுல இந்திரா, திண்டுக்கல் சீனிவாசன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, காமராஜ், பொள்ளாச்சி ஜெயராமன், வேலுமணி, சி.வி சண்முகம், தங்கமணி உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News