சத்தியமங்கலம்: கடம்பூர் வனப்பகுதி சாலையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கடம்பூர் வனப்பகுதியில் சாலையில் பிளாஸ்டிக் கழிவுகளை ஈரோடு வேளாளர் கல்லூரி மாணவ, மாணவிகள் அகற்றினர்.;
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கடம்பூர் வனச்சரக மலைப்பகுதி குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் இரு சக்கர வாகனங்கள், பேருந்துகள் உள்பட பல்வேறு வாகனங்களில் செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றை பயன்படுத்திய பிறகு வனப்பகுதிகளில் வீசி செல்கின்றனர்.
மேலும், கடம்பூர் மலைப் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் சிலர் வனப்பகுதிக்குள் தண்ணீர் பாட்டில், மதுபாட்டில், பாலித்தீன் பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி செல்வதாக புகார் எழுந்தது. இதை வனப்பகுதியில் வாழும் வனவிலங்குகள் சாப்பிட்டு செரிக்காமல் உடல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பும் நிகழ்கிறது. இதனை கருத்தில் கொண்டு வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில், டி.என்.பாளையம் வனத்துறையினர், வனப்பகுதியில் கொட்டிக்கிடக்கும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியை வழக்கமாக மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், இன்று (சனிக்கிழமை) ஈரோடு திண்டல் வேளாளர் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் இணைந்து, டி.என்.பாளையம் வனச்சரக எல்லையில் கே.என்.பாளையம் - கடம்பூர் செல்லும் மலைப்பாதை சாலையில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பாலித்தீன் பைகள் என குப்பைகள் சேகரமானது. பின்னர் அவற்றை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து குப்பைக்கிடங்கில் ஒப்படைத்தனர்.
இதில், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் பிரகலாதா, வனிதா மற்றும் மழைநீர் சேகரிப்பு போராளி சிவகுமார் , வனத்துறையினர், கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.